/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு வல்லுனர் குழு! ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பு
/
விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு வல்லுனர் குழு! ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பு
விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு வல்லுனர் குழு! ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பு
விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு வல்லுனர் குழு! ஜவுளித்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : அக் 28, 2024 05:40 AM
சூலுார் : 'ஜவுளித்தொழில் மேம்பாட்டுக்காக, வல்லுனர்கள் அடங்கிய விசைத்தறி தொழில் வளர்ச்சி குழு அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஸ்பின்னிங் மற்றும் விசைத்தறி ஜவுளித் தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், நுால் ரகங்கள் மற்றும் துணி ரகங்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. சார்பு தொழில்களாக, பஞ்சு விற்பனை, சைசிங் தொழில், துணி ரகங்கள் விற்பனை ஆகியன உள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இத்தொழில்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்து உள்ளதால், அனைத்தும் சீராக நடந்தால் தான் சந்தை நிலவரம் நன்றாக இருக்கும். பஞ்சு விலை ஏறினால், நுால் ரகங்கள் உற்பத்தி குறையும். நுால் ரகங்கள் விலை ஏறினால், துணி ரகங்கள் விலையும், உற்பத்தியும் குறையும். இதனால், சந்தை நிலவரம் எப்போதும் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது.
தொழில் பாதிப்பு
இது ஒருபுறம் இருக்க, மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம், போக்குவரத்து செலவு, உதிரிபாகங்கள் செலவு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் விசைத்தறி ஜவுளி தொழில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாமல் ஜவுளித்துறையினர் தவித்து வருகின்றனர். தொழிலில் உள்ள நெருக்கடிக்களுக்கு தீர்வு காண, பொதுவான அரசு அமைப்பு ஒன்று தேவை என்பது தொழில்துறையினர் கோரிக்கையாக உள்ளது.
நிரந்தர தீர்வு என்ன?
விசைத்தறி ஜவுளித் தொழில் முனைவோர் கூறியதாவது:
விசைத்தறி ஜவுளித்தொழில் நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அளவுக்கு அதிகமான உற்பத்தியா, போட்டிகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியா, மூலப்பொருட்களின் விலையில் உள்ள ஏற்ற, இறக்கங்களா, இதற்கு காரணம் என, குழம்பிக்கொண்டிருக்க வேண்டிய சூழல் தான் தினமும் உள்ளது. எங்கள் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது அவசர அவசியமாக உள்ளது. அதற்கு பொதுவான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இத்தொழிலுக்கு என, தனியாக விசைத்தறி தொழில் வளர்ச்சி கமிட்டி அமைக்க வேண்டும்.
அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அதில், விசைத்தறி ஜவுளித் துறையினர், மத்திய, மாநில அரசின் ஜவுளித் துறை அதிகாரிகள், வல்லுனர்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் எங்கள் பிரச்னைகளை உடனுக்குடன் பேசி தீர்வு காண முடியும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரிடம் விளக்கி கூறி மனு அளித்துள்ளோம். நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

