/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலாவதி மருந்து விற்பனையா? விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
/
காலாவதி மருந்து விற்பனையா? விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
காலாவதி மருந்து விற்பனையா? விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
காலாவதி மருந்து விற்பனையா? விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 07, 2025 09:05 PM
பொள்ளாச்சி; தமிழகத்தில் மருந்து உற்பத்தி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், 'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்' உள்ளது. இச்சட்டத்தின்படி முறையாக உரிமம் பெற்றவர்கள் மட்டுமே மருந்து தயாரித்து, விற்பனை செய்ய முடியும்.
மருந்தக ஆய்வாளர்கள் வாயிலாக மருந்து விற்பனை கண்காணிக்கப்படுகிறது. அவ்வாறு, இருந்தும், பொள்ளாச்சி மற்றும் உடுமலை நகரில், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:
மருந்து கடைகளில், காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதேநேரம், காலாவதியான மருந்துகள் இருந்தால், அதனை தனியான ரேக்கில் வைத்து, 'விற்பனைக்கு அல்ல' என, குறிப்பிட்டு வைத்திருக்க வேண்டும்.
அதற்கான பராமரிப்பு பதிவேடு இருத்தல் அவசியம். விற்பனை செய்யப்படும் மருந்துகளுடன் அவைகளை வைத்திருத்தல் கூடாது. மேலும், காலாவதி மருந்துகளை, மருந்துக் கடைக்காரர்களே அழிக்க முற்படக் கூடாது.
மாறாக, எந்த தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்டதோ, அந்த நிறுவனத்திற்கு காலாவதி மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனத்தால் மட்டுமே காலாவதி மருந்துகளை அழிக்க வேண்டும்.
இல்லையெனில், அந்த நிறுவன அங்கீகாரத்துடன் செயல்படும் முகவரிடம் கொடுக்க வேணடும். அவர்கள், மருத்துவக் கழிவுகள் அழிப்புக்காக ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்திடம் அளித்து, காலாவதி மருந்துகளை அழிக்க நடவடிக்கை எடுப்பர். இதற்காகவே, காலாவதி தேதி முடியும் மருந்துகள் குறித்த விபரத்தை மூன்று மாதத்திற்கு முன்னரே அறிந்து, அதனை விற்பனை செய்ய திட்டமிட வேண்டும் என, மருந்துக்கடைக்காரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக, மொத்த விற்பனையாளர்களிடையே கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
மக்களும் மருந்துகள் வாங்கும் விஷயத்தில், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எந்த மருந்தையும், தாங்களாகவே கடைகளில் வாங்கிச் சாப்பிடக் கூடாது. டாக்டர் பரிந்துரை படியே மருந்து வாங்க வேண்டும். மாத்திரைப் பட்டியலிலும், மருந்து பாட்டில்களிலும் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, 'பேட்ச்' எண் போன்றவைத் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.