/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம்
/
வெள்ளை ஈ பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம்
வெள்ளை ஈ பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம்
வெள்ளை ஈ பூச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் பயிற்சியில் விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : பிப் 16, 2024 01:05 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, 'அட்மா' திட்டத்தில், வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல் குறித்து பயிற்சி நடந்தது.
ஆனைமலை அருகே, கரியாஞ்செட்டிபாளையம் உச்சிமாகாளியம்மன் கோவில் வளாகத்தில், 'அட்மா' திட்டத்தின் கீழ், தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துதல் குறித்த பயிற்சி நடந்தது. வட்டார 'அட்மா' தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சுதாலட்சுமி பேசியதாவது: மஞ்சள் வண்ணம் இயற்கையிலேயே வெள்ளை ஈக்களை ஈர்க்கும் தன்மை உடையதால், 5 அடி நீளம், ஒன்றரை அடி அகலம் கொண்ட மஞ்சள் நிற பாலிதீன் தாள்களை ஏக்கருக்கு, 5 என்ற எண்ணிக்கையில் ஆமணக்கு எண்ணெய் தடவி, இரண்டு மரங்களுக்கு நடுவில், 5-6 அடி உயரத்தில் கட்ட வேண்டும்.
மேலும், சோலார் விளக்கு பொறியை இரவு நேரத்தில் எரிய விடுவதாலும் பறக்கும் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் ஒன்றிரண்டு மரங்களில் இருக்கும் நிலையிலேயே, விவசாயிகள் வரும்முன் தடுக்கும் முறையில், மரத்திற்கு 1.5 முதல் 2 கிலோ அளவில் வேப்பம்புண்ணாக்கு இட்டு நீர் பாய்ச்சலாம்.
இந்த முறையானது, இப்பூச்சியை ஆரம்ப நிலையிலேயே கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கு எளிதானது. ஈக்கள் பாதித்து கருமை நிற பூஞ்சையுடன் இருக்கும் நிலையில், மைதா மாவு கலந்து குறைந்த ஒட்டும்தன்மையில், மரத்தின் கீழ்வரிசை மட்டை ஓலைகளின் அடிப்பகுதியில் படுமாறு மின்மோட்டார் பயன்படுத்தி, நீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தலாம்.
வேர் வாயிலாக, மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லிமருந்து கட்டுவதால், இந்த ரூகோஸ் வெள்ளை ஈ பல்கி பெருகி விளைச்சல் கடுமையாக பாதிக்கும். அதனால், அந்த பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய அரசு திட்டங்கள் ஆலோசகர் மாரியப்பன் முன்னிலை வகித்து பேசுகையில், ''தேனீக்களால் மட்டுமே, தென்னம்பாளைகளில் 90 சதவீதம் இயற்கையாகவே கருவுறுதல் நடைபெற்று குலை உருவாகிறது. தனிப்பயிராக பயிரிடப்படும் தென்னையில், நீர் மற்றும் சூரிய ஒளியை வீணாக்காமல் துவரை, தட்டை, கொள்ளு போன்ற பயறு வகைகளை பயிரிடலாம்.
வேளாண்மை விரிவாக்க கிடங்குகளில் தற்போது இருப்பில் உள்ள தென்னை, சிறுதானியம், பயறு, நிலக்கடலைக்கான நுண்ணுாட்டகலவை உரங்களை மானிய விலையில் பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண் அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர் சித்திக், மற்றும் 'அட்மா' உதவி மேலாளர் பாரதிராஜா ஆகியோர் செய்திருந்தனர்.