ஏற்றுமதியாளர்கள் மேலாண்மை மேம்பாட்டு திட்ட கருத்தரங்கம்
ஏற்றுமதியாளர்கள் மேலாண்மை மேம்பாட்டு திட்ட கருத்தரங்கம்
ADDED : செப் 29, 2026 07:14 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கயிறு வாரியம் சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கான மேலாண்மை மேம்பாட்டு திட்டம் குறித்து இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. கயிறு ஏற்றுமதியாளர்களுக்கான மேலாண்மை திறன்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், கயிறு வாரியத்தின் துணை இயக்குனர் ரெஜி வரவேற்றார்.
பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா துவக்கி வைத்து பேசினார். சர்வதேச சந்தையின் புதிய தேவைகளை பூர்த்தி செய்ய கயிறு தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கொச்சி கயிறு வாரியத்தின் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி அதிகாரி தீபக் சோமன் நன்றி கூறினார்.
வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம், தாவர தனிமைப்படுத்தல் துறை ஆகியவற்றின் வல்லுநர்களால் தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. இதில், ஏற்றுமதி நடைமுறைகள், ஒழுங்குமுறை தேவைகள், ஆவணங்கள், கயிறு ஏற்றுமதி துறை சார்ந்த பிற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கயிறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களது ஏற்றுமதி செயல்பாடுகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், சர்வதேச சந்தைகளில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகளை கண்டறிவதற்கும் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக கயிறு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
