ADDED : அக் 27, 2025 10:42 PM
பள்ளி மேலாண்மை குழு நடவடிக்கை ஆலோசகர்களை நியமனம் செய்ய முடிவு
பெ.நா.பாளையம்: படிப்பில் ஆர்வமின்மை, மொபைல் போன் அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களை பாதுகாக்க, மருத்துவத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், ஆலோசகர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் வகையில், மாதம் தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதத்துக்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்து வகை அரசு பள்ளிகளில் நவ., மாதம், 7ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, 3.00 மணியிலிருந்து, 4.30 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில், பல்வேறு கூட்ட பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதில், படிப்பில் போதிய ஆர்வம் இன்மை, மொபைல் போன் அடிமை, போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ள மாணவர்களை கண்டறிந்து, அக்குழந்தைகளை அதிலிருந்து விடுவிக்க, அவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த மருத்துவ துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக ஆலோசகர்களை மாதம் ஒருமுறை பள்ளிக்கு வரவழைத்து, குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இது குறித்து சில குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,' அரசு பள்ளியில் மொபைல் போன் எடுத்து வர தடை செய்யப்பட்டு இருந்தாலும், பல குழந்தைகள் ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து செல்கின்றனர்.
பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் மாணவர்களில் சிலர், தங்களுடைய சீருடைகளை கூட அகற்றாமல், மொபைல் போனுக்கு அடிமையாகி இரவு உணவு வரை அதிலேயே தங்களுடைய கவனத்தை செலுத்துகின்றனர். இதனால், வீட்டுப்பாடங்களை படிக்க முடியாமல், படிப்பில் பின் தங்கும் நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது வெறும் தீர்மானமாக இல்லாமல், அதை செயல்முறைப்படுத்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.
இது தவிர, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
பள்ளிகளில் இருந்து இடையில் நின்ற மற்றும் இடையில் நிற்க வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மேலும், கலைத்திருவிழா போட்டிகள், அறிவு திறன் சார் குறைபாடு உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு, அவரவர் கற்கும் நிலைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கூட்டத்தில் உறுதி செய்யப்படுகிறது.

