/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி செயலியால் ரூ. 47 லட்சம் 'காலி' ; தொடர்கதையாகும் 'ஆன்லைன்' மோசடிகள்
/
போலி செயலியால் ரூ. 47 லட்சம் 'காலி' ; தொடர்கதையாகும் 'ஆன்லைன்' மோசடிகள்
போலி செயலியால் ரூ. 47 லட்சம் 'காலி' ; தொடர்கதையாகும் 'ஆன்லைன்' மோசடிகள்
போலி செயலியால் ரூ. 47 லட்சம் 'காலி' ; தொடர்கதையாகும் 'ஆன்லைன்' மோசடிகள்
ADDED : ஜன 24, 2025 06:37 AM

கோவை; போலி செயலி வாயிலாக தங்க வியாபாரியை ஏமாற்றி ரூ. 47 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, சொக்கம்புதுாரை சேர்ந்தவர் மதன் குமார், 48; தங்க வியாபாரி. இவர் இணையதளத்தில் பங்கு சந்தை தகவல்களைபார்த்துள்ளார். இதையடுத்து, அதில் வந்த 'ஹெம் செக்யூரிட்டிஸ் எக்ஸ்சேஞ்ச்' என்ற ஒரு 'லிங்க்'ஐ பதிவிறக்கம் செய்தார்.
அதிலிருந்த செயலியையும் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டார்.
பின்னர், மதன் குமாரை ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்த்துள்ளனர். குழுவின் அட்மின் ஆயிஷா சிதிகா என்பவர் மதன் குமாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், மதன் குமாரின் மொபைல் எண்ணை பயன்படுத்தி, 'ஹெம் பிரீமியம் புரோக்கர்' கணக்கை துவக்கி கொடுத்துள்ளார்.
மேலும், அதன் வாயிலாக தாங்கள் கொடுக்கும் அறிவுரைகளை பின்பற்றி, டிரேடிங் செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதையடுத்து, 'வாட்ஸ் அப்' குழுவில் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மதன் குமார் டிரேடிங் செய்ய துவங்கினார். அதன்படி, பல்வேறு தவணைகளில் ரூ. 47.40 லட்சம் முதலீடு செய்தார்.
சில நாட்களில் அவரது கணக்கில் ரூ. 1 கோடி இருப்பது போல் செயலியில் காண்பித்துள்ளது. இதையடுத்து, மதன் தனது லாப பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, பணத்தை எடுக்க வேண்டும் எனில், மேலும் பணம் செலுத்த வேண்டும் என காண்பித்துள்ளது. இதில் சந்தேகமடைந்த மதன் குமார் சம்பவம் குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கோவையில் சமீப காலத்தில், இதுபோல் பலரும் ஆன்லைன் மோசடி மற்றும் போலி செயலிகளால் பணத்தை இழந்து வருவது, தொடர்கதையாகி வருகிறது.

