/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்குகளை பிடிக்காவிட்டால் குடும்பத்துடன் முற்றுகை
/
குரங்குகளை பிடிக்காவிட்டால் குடும்பத்துடன் முற்றுகை
குரங்குகளை பிடிக்காவிட்டால் குடும்பத்துடன் முற்றுகை
குரங்குகளை பிடிக்காவிட்டால் குடும்பத்துடன் முற்றுகை
ADDED : செப் 23, 2025 09:07 PM
மேட்டுப்பாளையம், ; பாலப்பட்டி கிராமத்தில் வீடுகளில் புகுந்து, உணவு பொருட்களை சேதம் செய்யும் குரங்குகளை, பிடிக்காவிட்டால் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அடுத்த பாலப்பட்டியில் தமிழக விவசாய சங்க கிளை துவக்க விழா நடந்தது. விழாவுக்கு ஊர் கவுடர் ரவி தலைமை வகித்தார்.
டாக்டர் திப்பையன், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகராஜ் வரவேற்றார். தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் புதிய கிளையை துவக்கி வைத்து பேசியதாவது:
விவசாய பயிர்களை யானைகள், மான்கள், மயில், காட்டுப்பன்றிகள் ஆகிய வனவிலங்குகள் சேதம் செய்து வருகின்றன. இரவில் காவலுக்கு இருக்கும் விவசாயிகளுக்கு யானைகளால், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
காட்டுப் பன்றிகளின் தொல்லையால், தீவனப் பயிர்கள் சேதம் அடைகின்றன. இதனால் பசு மாடுகளுக்கு விலை கொடுத்து, தீவனம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது: பாலப்பட்டியில் குரங்குகளின் தொல்லை அதிகளவில் உள்ளன. வீடுகளில் புகுந்து உணவு பொருட்களை சேதம் செய்து, குழந்தைகளை விரட்டி வருகிறது. குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் குடும்பத்துடன் சிறுமுகை வனத்துறை அலுவலகம் முன்பு, முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இப்பகுதியில் வாழைகளை சேதம் செய்யும் யானைகளை பிடித்து, வேறு இடத்தில் விடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிளையின் தலைவராக ரவி, துணைத் தலைவராக ரங்கராஜ், செயலாளராக பழனிசாமி, துணை செயலாளராக துரைசாமி, பொருளாளராக செந்தில்குமார், துணை பொருளாளராக வெள்ளியங்கிரி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.