UPDATED : மே 01, 2026 05:59 PM
ADDED : மே 01, 2026 05:41 PM
பெ.நா.பாளையம்:கோடை உழவு செய்வதால் பயிர்கள் செழித்து வளரும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
கோடை மழை பெய்யும் முன், மழை நீர் வீணாகாமல் இருக்க, கோடை உழவு மேற்கொள்ள வேண்டும். இதனால், மானாவாரி நிலங்களில் கடினமாக உள்ள மண்ணின் இறுக்கம் குறையும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். காற்றோட்டம் அதிகரிப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், நன்கு வளர்ச்சி அடையும்.
களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் குறைந்து, மண்ணின் விஷத்தன்மை குறைகிறது. நீர் நன்கு ஊடுருவி, வேர் மண்டலம் வரை சென்று, நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது. களைகளின் விதைகள் மேல் பகுதிக்கு வந்து சூரிய வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. பூச்சிகளின் முட்டைகளும், கூட்டு புழுக்களும் அழிக்கப்படுகின்றன. தாவர கழிவுகளின் மக்கும் தன்மை அதிகரிக்கிறது. மண்வளமும் அதிகரிக்கிறது. மழை நீர் சிறிதும் வீணாகாமல் பயிருக்கு கிடைக்கிறது. இதனால் மழைநீர் சேகரிப்பு திறன் அதிகரிக்கிறது. தற்போது கோடை உழவு செய்ய சரியான தருணம். இதை விவசாயிகள் பயன்படுத்தி, கோடை உழவு செய்து, அதிக பயன் பெறலாம் என, முன்னோடி விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
