/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம்
/
விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம்
ADDED : அக் 11, 2024 10:21 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும், 100 ஹெக்டேர் அளவில், கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மழை பொழிவு குறைந்ததால், 30 ஹெக்டேர் வரை மட்டுமே கொண்டைக்கடலை சாகுபடி இருந்தது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், காட்டம்பட்டி, சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், பொள்ளாச்சி வடக்கு பகுதிகளில், கொண்டைக்கடலை சாகுபடி அதிகப்படியாக இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில், 100 ஹெக்டேர் அளவை பூர்த்தி செய்யலாம். எனவே, விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
கொண்டைக்கடலை விதை, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் மற்றும் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டம் போன்றவைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு கொண்டைக்கடலை விதை வழங்க தேவையான அளவு வேளாண் துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது. எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.