/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமற்ற உயிர் உரங்கள்; ஏமாறும் விவசாயிகள்
/
தரமற்ற உயிர் உரங்கள்; ஏமாறும் விவசாயிகள்
ADDED : ஏப் 03, 2025 11:45 PM
- நமது நிருபர் -
தரமற்ற உயிர் உரங்கள் விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
விவசாய நிலங்களில் ரசாயன உரங்களின் பயன் பாட்டை குறைக்கும் வகையில், ரைசோபியம், அஸோடோபாக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் நீல பச்சை பாசி உள்ளிட்ட உயிர் உரங்கள், திரவ வடிவில், வேளாண் துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
'வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் உயிர் உரங்கள், தரம் நிறைந்ததாகவே இருக்கின்றன' என்கின்றனர் வேளாண் துறையினர்.
வேளாண் துறை அலுவலர்கள் கூறியதாவது: வேளாண் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, மானியத்தில் விற்பனை செய்யப்படும் உயிர் உரங்கள், ஒரு விவசாயிக்கு, ஆண்டுக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் மட்டுமே வழங்கப்படுகிறது.
கூடுதல் உரம் தேவைப்படும் விவசாயிகள், வெளிச்சந்தையில் வாங்குகின்றனர். மானியத்தில் வழங்கப்படும் உயிர் உரம், விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.
பல்வேறு உர நிறுவனங்களின் முகவர்கள் தோட்டம், தோட்டமாக சென்று விவசாயிகளுக்கு தங்கள் நிறுவனத்தின் உரங்களை வழங்குகின்றனர்; அவற்றில் பல, தரமற்றவையாக இருப்பதால் மகசூல் மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போலி உரத்தால் மகசூல் இழப்பு
அந்தந்த வட்டார வேளாண் தரக்கட்டுப்பாடு பிரிவு சார்பில் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் நோட்டீஸில், ''இயற்கை உரம்என்ற பெயரில் முகவர்கள் வாயிலாக விற்கப்படும் உரங்களை விவசாயிகள் வாங்கவேண்டாம்.
'பயோ உரம்' என்ற பெயரில்,போலி உரங்களை பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகரிப்பதுடன் மகசூல் இழப்பும் ஏற்படும். முகவர்கள் தங்களை தொடர்பு கொண்டால், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர்களை அணுகி தீர்வு காணலாம்'' என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.