/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசடைந்தது போர்வெல் நீர்; விவசாயிகள் சரமாரி புகார்
/
மாசடைந்தது போர்வெல் நீர்; விவசாயிகள் சரமாரி புகார்
மாசடைந்தது போர்வெல் நீர்; விவசாயிகள் சரமாரி புகார்
மாசடைந்தது போர்வெல் நீர்; விவசாயிகள் சரமாரி புகார்
ADDED : ஏப் 07, 2025 05:06 AM
அன்னுார்; 'அன்னுார் குளத்தை ஒட்டி உள்ள தோட்டத்து கிணறுகளில், நீர் துர்நாற்றம் வீசுகிறது,' என புகார் எழுந்துள்ளது.
அன்னுாரில், ஓதிமலைசாலையில், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்திற்கு தெற்கு, மேற்கு, வடக்கு பகுதியில் இருந்து மழை நீர் வருகிறது.
அத்திக்கடவு திட்டத்தில் இக்குளம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு தெற்கு பகுதியில் இருந்து தினமும் பல ஆயிரம் லிட்டர் கழிவுநீர் வருகிறது.
குளத்தில் மழை நீர் வரத்து இல்லாததாலும், அத்திக்கடவு திட்ட நீர் வராததாலும், கழிவுநீர் கலந்து கழிவு நீர் குளமாக மாறிவிட்டது.
இது குறித்து குளத்தை ஒட்டியுள்ள தோட்டத்து விவசாயிகள் கூறுகையில், ''குளத்தின் வடபுறம் மற்றும் கிழ புறம் 50 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில், வாழை, கரும்பு மற்றும் காய்கறி பயிர் செய்து வருகிறோம்.
சில மாதங்களாக குளத்தில் அதிக அளவில் கழிவுநீர் சேர்ந்து வருகிறது. மழை நீர் வரத்து இல்லை. இதனால் நிலத்தடியில் கழிவுநீர் இறங்கி குளத்தை ஒட்டி உள்ள தோட்டத்து கிணறுகளில் கழிவுநீர் கலக்கிறது.
பயிர்களுக்கு பாய்ச்சுவதற்கு தோட்டத்து கிணற்றில் மோட்டார் ஆன் செய்தால் துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக குளத்தில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும்.
குளத்தில் கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக்கடவு திட்ட நீரை குளத்தில் விட வேண்டும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மழைநீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும்,'' என்றனர்.

