/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் மாநாடு
/
அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் மாநாடு
ADDED : ஜன 02, 2025 05:48 AM

சூலுார்; விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் வரும் 5ம்தேதி கோரிக்கை மாநாடு நடத்தப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், கோவை இருகூரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை, விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை  ஐ.டி.பி.எல்., நிறுவனம் மேற்கொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தினர். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பணிக்கு எதிராக தடை உத்தரவு பெற்றனர். மத்திய பெட்ரோலிய அமைச்சர், செயலர் ஆகியோரை விவசாயிகள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளையும் சந்தித்து மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த கோரினர். தொடர்ந்து, இரு மாவட்டங்களிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடந்த, 40 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்று வழி திட்ட கோரிக்கை மாநாடு நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
வரும், ஜன., 5ம்தேதி காடையூர் எஸ்.எஸ். மகாலில் கோரிக்கை மாநாடு நடத்த தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாநாட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.  அதற்காக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விவசாயிகளையும் நேரில் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழ்களை, மாற்று வழி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்,' கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், குழாய் பாதிக்கப்பட்டதால் பாதிப்பு உள்ளானோம். அதில் இருந்து இதுவரை மீளவில்லை. தற்போது, மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல், பழைய அனுமதியை கொண்டு மீண்டும் குழாய் பதிக்க துவங்கினார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையாணை பெற்றுள்ளோம்.
சாலை ஓரமாக திட்டத்தை செயல்படுத்த கோரியும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் வரும், 5 ம்தேதி காடையூரில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம். அதற்காக விவசாயிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம்' என்றனர்.

