/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
/
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 25, 2025 06:11 AM
திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி., பாசனத்திட்டம் பிரதானமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் வாயிலாக, இரு மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தாராபுரம் தாலுகாவில் உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம் நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்; அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அலுவலர்கள் வசம் சேர்க்கப்பட்டது.
தாராபுரம் தாலுகா, உப்பாறு அணைக்கு உயிர் நீர் வழங்க ேகாரி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். விவசாயிகள் கூறியதாவது:
உப்பாறு அணைக்கு உயிர் நீர் வழங்கி, முழு கொள்ளளவை நிரப்பித்தரவேண்டும். கடந்த மாதம், அரசூர் வழியாக, திருமூர்த்தி அணையில் இருந்து ஐந்து நாட்கள் திறக்கப்பட்ட நிலையில், உப்பாறு அணையில் 11 அடி தண்ணீர் இருந்து வருகிறது. பாசன பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. நிலத்தடி நீர்மட்டம், கடுமையாக சரிந்துவிட்டது.
பஞ்சலிங்கபுரம் அருவியில் நல்ல மழை பெய்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பி.ஏ.பி. நான்காம் மண்டலம் நிறுத்தப்படும் தருவாயில் உள்ளது. ஆகவே, இந்த இடைவெளியில், அரசூர் வழியாக, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கவேண்டும்.
உப்பாறு அணையின் இடது, வலது வாய்க்கால் துார்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. பல ஆண்டுகளாக துார்வாராததால், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
அம்மரங்களை அகற்றாமலும், சரிவர துார்வாராமலும், விட்டுச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக, பாசன சங்கம் வாயிலாக தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு அளித்தனர். கூட்டத்தில், மக்களிடமிருந்து மொத்தம் 356 மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது
-- நமது நிருபர் -:.

