/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவிழாவுக்கு வசதிகள் செய்யாதது ஏன்? அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
திருவிழாவுக்கு வசதிகள் செய்யாதது ஏன்? அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவிழாவுக்கு வசதிகள் செய்யாதது ஏன்? அதிகாரிகளுடன் வாக்குவாதம்
திருவிழாவுக்கு வசதிகள் செய்யாதது ஏன்? அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : டிச 25, 2025 06:12 AM
குடிமங்கலம்: 'திருவிழாவின் போது எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாமல், ஏலத்தின் போது மட்டும் அதிகாரிகள் வருவது ஏன்,' என ஆல்கொண்டமால் கோவில் பொது ஏலத்தில் பக்தர்கள் கேள்வி எழுப்பியதால், பரபரப்பு நிலவியது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலையொட்டி கோவிலில் நடைபெறும் திருவிழாவுக்கு, சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதற்காக ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கோவில் முன் கடைகள் அமைக்கவும், ராட்டினம் உட்பட விளையாட்டு சாதனங்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். வரும் பொங்கல் பண்டிகை திருவிழாவுக்காக, கோவில் வளாகத்தில் பொது ஏலம் விடப்பட்டது.
ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தமிழ்வாணன் தலைமையில் ஏலம் துவங்கியது. அப்போது ஏலதாரர்கள், தி.மு.க.,வினர் மற்றும் பக்தர்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவிழாவின் போது மட்டுமே, அதிகாரிகள் ஆல்கொண்டமால் கோவிலுக்கு வருகின்றனர். திருவிழாவையொட்டி எவ்வித அடிப்படை வசதிகளும் செய்வதில்லை.
சோமவாரப்பட்டி கிராமத்தில் இருந்து மக்கள் நடந்து வரும் பாதையில், தற்காலிக மின் விளக்கு அமைத்தல், திருவிழாவுக்கு முன், கோவிலில் மேம்பாட்டுப்பணிகள் செய்வதில் அலட்சியம் காட்டப்படுகிறது.
பிற மேம்பாட்டுத்திட்டங்களும் கோவிலில் செய்யப்படுவதில்லை. பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திருவிழாவில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்,' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து விடப்பட்ட ஏலத்தில், அரசு நிர்ணயித்த ஏலத்தொகைக்கு யாரும் ஏலம் கோர முன்வரவில்லை. இதனால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

