/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
/
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
ADDED : டிச 25, 2025 06:12 AM

வால்பாறை: குடியிருப்பு பகுதியில், பகல் நேரத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால், குரங்குமுடி எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், பருவமழைக்கு பின், வனவளம் பசுமையானதால் கேரளாவிலிருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனியாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, புதுத்தோட்டம், கருமலை, இஞ்சிப்பாறை, முருகன் எஸ்டேட், உருளிக்கல், குரங்குமுடி, முடீஸ், முத்துமுடி, நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், பகல் நேரத்தில் ஒற்றை யானை முகாமிட்டது. இதனால், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமலும், வீட்டிற்குள் இருக்க முடியாமலும் அச்சத்துடன் தவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
குரங்குமுடி, முருகன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதில், ஒற்றை யானை மட்டும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது வந்து செல்கிறது.
பகல் நேரத்தில் கூட யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒற்றை யானையை வேறு பகுதிக்கு நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

