/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத குடோன்! விவசாயிகள் ஏமாற்றம்
/
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத குடோன்! விவசாயிகள் ஏமாற்றம்
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத குடோன்! விவசாயிகள் ஏமாற்றம்
பயன்பாட்டுக்கு திறக்கப்படாத குடோன்! விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : நவ 11, 2024 06:42 AM

உடுமலை : விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கான குடோன் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால், கொங்கல்நகரம் பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. மக்காச்சோளம், கொண்டைக்கடலை, கொத்தமல்லி, சோளம், பருத்தி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அறுவடையின் போது, விளைபொருளுக்கு விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கின்றனர். எனவே, விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய நபார்டு திட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக கிராமந்தோறும் குடோன்கள் கட்டப்பட்டது.
அவ்வகையில், கொங்கல்நகரத்தில், 2014-15ம் ஆண்டில், 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், விளைபொருள் இருப்பு குடோன் கட்டப்பட்டது.
இந்த குடோன், 500 மெட்ரிக்., டன் கொள்ளளவு உடையதாகும். ஆனால், இதுவரை குடோன் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கொங்கல்நகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்குட்பட்ட குடோன் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளதால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.
இந்த குடோனில் விளைபொருட்களை இருப்பு வைப்பதால், அரசின் தானிய ஈட்டுக்கடன் பெற முடியும். இது குறித்து ஏற்கனவே கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வரும் அறுவடை சீசன் துவங்கும் முன் குடோனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.