/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் வேண்டும் பழைய நடைமுறை: விவசாயிகள் வலியுறுத்தல்
/
மீண்டும் வேண்டும் பழைய நடைமுறை: விவசாயிகள் வலியுறுத்தல்
மீண்டும் வேண்டும் பழைய நடைமுறை: விவசாயிகள் வலியுறுத்தல்
மீண்டும் வேண்டும் பழைய நடைமுறை: விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2025 12:25 AM

கோவை; கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், விவசாய அமைப்பினருடனான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது. மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தலைமை வகித்தார்.இதில், தமிழக விவசாயிகள் சங்கம், சிறுவாணி உற்பத்தியாளர் நிறுவனம், வெள்ளிங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆகிய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தற்போது, கூட்டுறவு சங்க பதிவாளரின் சுற்றறிக்கையில், சிபில் ஸ்கோர் பார்த்து கூட்டுறவு வங்கியின் கடன் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ஆட்சேபனையின்மை சான்று பெற்று, கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் தொகை, இரண்டு லட்சம் ரூபாய் என கணக்கிட்டால், வாழை மற்றும் மஞ்சள் பயிர் செய்த விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கருக்கு மட்டுமே உற்பத்தி செலவுக்கு போதுமானது. மீதி தொகையை பெற, மற்ற தேசிய வங்கிகளை நாட வேண்டியுள்ளது.
எனவே, நடைமுறையில் இருந்து வந்த, விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரை வட்டியில்லா கடன் கொடுக்கும் நிலையை எவ்வித நிபந்தனைக்கும் உட்படுத்தாமல் மீண்டும் தொடர ஆவண செய்ய வேண்டும். பரப்பளவுக்கு ஏற்ப கடன் வழங்க வேண்டும்.
சிபில் ஸ்டேட்மென்ட் பெற்று, பயிர் கடன் வழங்கும் நடவடிக்கை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு நடவடிக்கை. தமிழக அரசு கிரிடிட் இன்பர்மேஷன் நிறுவனம் என்று தொடங்கி, அதை சிபில் நிறுவனத்துக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.