ADDED : டிச 12, 2024 11:23 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் சோளம் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 2,900 முதல் மூவாயிரம் ஹெக்டேர் வரை ஆண்டுதோறும் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் பலர் விற்பனை செய்தும், மாட்டுக்கு தீவனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து, சூலக்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி கூறியதாவது:
சூலக்கல் பகுதியில் குத்தகைக்கு காடு எடுத்து, 3.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறேன். தற்போது சோளம் அறுவடை நடக்கிறது. ஆடி மாதத்தில் சோளம் விதைப்பு செய்தோம். கார்த்திகை மாதம் முதல் அறுவடையை துவங்கியுள்ளோம்.
மானாவாரி பயிராக சோளம் விதைப்பு செய்தோம். இது பெரிய மஞ்சள் சோளம் ரகமாகும். தற்போது வரை, 30 முதல் 35 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டுள்ளது. அறுவடை முழுவதுமாக நிறைவு பெறும் போது, கூடுதலாக 30 முதல் 35 ஆயிரம் வரை செலவாகும்.
அறுவடை செய்த சோளத்தை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த உள்ளோம். இது ஒரு ஆண்டுக்கு தீவனமாக பயன்படும். மேலும், கூடுதலாக சோளம் இருப்பின் சொந்த தேவைக்கும், விற்பனைக்கும் பயன்படுத்துவோம்.
இவ்வாறு, கூறினார்.
