/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயந்திரமயமாக்கலில் விவசாயிகள் ஆர்வம்; 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியில் அப்பட்டம்
/
இயந்திரமயமாக்கலில் விவசாயிகள் ஆர்வம்; 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியில் அப்பட்டம்
இயந்திரமயமாக்கலில் விவசாயிகள் ஆர்வம்; 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியில் அப்பட்டம்
இயந்திரமயமாக்கலில் விவசாயிகள் ஆர்வம்; 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியில் அப்பட்டம்
ADDED : ஜூலை 14, 2025 07:08 AM

கோவை; கொடிசியா சார்பில் நடந்து வரும், 'அக்ரி இன்டெக்ஸ் 2025' சர்வதேச வேளாண் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்ற விவசாயிகள் பலரும், இயந்திரமயமாக்கலில் அதிக ஆர்வம் காண்பித்தனர்.
கோவை, கொடிசியா வளாகத்தில், ஏழு அரங்கங்களில் 600க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் வேளாண் வர்த்தக கண்காட்சி நடந்து வருகிறது.
மரபு சார் விவசாயம் முதல் நவீன தொழில்நுட்பங்கள் வரை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியில் அனைத்து துறைகளிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும், பண்ணை இயந்திரங்கள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வேலை ஆட்கள் பற்றாக்குறை, குறைந்த கால அவகாசத்தில் பணியை முடிக்கலாம், செலவு குறைவு, எளிதில் கையாளக்கூடிய தொழில்நுட்பங்கள் போன்றவை, விவசாயிகளை இயந்திரமயமாக்கலை நோக்கி திருப்பியுள்ளன.
குறு, சிறு விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இரு சக்கரங்களில் இயக்கவல்ல பண்ணை இயந்திரங்கள், உழவுக் கருவிகள், களையெடுத்தல், நாற்று நடும் கருவிகள், மண்ணை பண்படுத்தும் கருவிகள் விவசாயிகளிடையே, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மரப்பயிர், பழப்பயிர் சாகுபடி, வேளாண் காடு வளர்ப்பு திட்டம் போன்றவை குறித்த விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு குழி தோண்டுவதற்கான கருவிகள், அரவை உபகரணங்கள் உள்ளிட்ட கருவிகள் குறித்து அதிகம் விசாரிக்கின்றனர்.
தேங்காய் உரிக்கும் கருவி, தென்னை மட்டை உள்ளிட்ட திடக்கழிவுகளை துகள்களாக்கும் இயந்திரம் ஆகியவையும், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அகழ்வு இயந்திரங்கள்
பெரிய விவசாயிகளும், உழவர் உற்பத்தி மன்றங்களும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கனரக வாகனங்களில் ஆர்வம் காட்டினர்.
குறிப்பாக, 35 ஹெச்.பி., மற்றும் அதற்கும் கூடுதலான திறன் கொண்ட டிராக்டர்களில் பொருத்திக் கொள்ளும் வகையிலான, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மண் அகழ்ந்தெடுக்கும், அள்ளும் இயந்திரங்கள் குறித்து விசாரித்து அறிந்தனர்.
டிரோன்கள், ஸ்பிரேயர்கள், சிறிய டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், விதைக்கும் கருவிகள், தீவன அரவை இயந்திரங்கள் உள்ளிட்ட, பல்வேறு இயந்திரங்கள் குறித்தும் விவசாயிகள் ஆர்வமாக விசாரித்து அறிந்தனர்.
விவசாயிகள் ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட, பல்வேறு ரக நாற்றுகளை ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
பல்வேறு நிறுவனங்கள் சார்பில், திசு வளர்ப்பு உட்பட வீரிய ரக வேளாண் பயிர்கள், விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரிவிலும் விவசாயிகளின் ஆர்வம் அதிகமாக இருந்தது.
இன்று நிறைவு
கண்காட்சி, இன்றுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் இன்று மதியம் 2:00 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.