/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 18, 2025 09:28 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில் மானிய திட்டங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதில், மருதம் தக்காளி, வரி கத்திரிக்காய், குடுவை சுரைக்காய் உள்ளிட்ட பாரம்பரிய காய்கறிகள் விதைப்பு செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 24 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு, இரண்டு ஹெக்டேர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னையில் ஊடுபயிராக மிளகு சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, 3 ஹெக்டேர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னையில் ஊடுபயிராக திசுவாழை சாகுபடி செய்ய (உயிர் உரங்களுடன்) ஒரு ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதம் முன்னுரிமையும், மற்ற கிராமங்களுக்கு, 20 சதவீதம் முன்னுரிமையும் அளிக்கப்படும்.
அரசு திட்டத்தையும், மானியத்தையும் விவசாயிகள் பயன்படுத்தி, தோட்டக்கலைத்துறை பயிர் சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இத்திட்டங்கள் குறித்த சந்தேகம் மற்றும் ஆலோசனைகளுக்கு கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.