/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல் கால் பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
கல் கால் பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 24, 2025 08:26 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டார விவசாயிகள் மானியத்தில், கல் கால் பந்தல் அமைக்க தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும், 100 ஹெக்டேர் பரப்பளவில், பீர்க்கங்காய், புடலை, பாகற்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் வாயிலாக, புதிதாக நிரந்தர கல் கால் பந்தல் அமைக்க ஏக்கருக்கு, 1.20 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இதில், பொது பிரிவினருக்கு, 2.4 ஹெக்டேரும், எஸ்.சி., பிரிவினருக்கு, 0.6 ஹெக்டேர் பரப்பளவு என, மொத்தம் மூன்று ஹெக்டேர் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு, 80 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். மற்ற பகுதியினை சேர்ந்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.
கல் கால் பந்தல் அமைப்பதன் வாயிலாக, விவசாயிகள் வருவாயை பெருக்கலாம். மேலும், இரு ஆண்டுகளில், 5 முறை தொடர்ச்சியாக பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம். எனவே, இத்திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.