/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீரை குளங்களில் சேமிக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
/
மழைநீரை குளங்களில் சேமிக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
மழைநீரை குளங்களில் சேமிக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
மழைநீரை குளங்களில் சேமிக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ADDED : ஜூன் 08, 2025 10:42 PM
கோவை; கனமழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது, நீர் வீணாகாமல், அதை முறையாக கோவை பகுதியில் உள்ள குளங்களில் சேமிக்க, கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் போது, நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அந்த நீர், நொய்யல் படுகையில் உள்ள குளங்களில் முறையாக சேமிக்கப்படாமல், வீணாக கடலில் கலக்கிறது.
இந்த நீரை சேமிக்க, இங்குள்ள குளங்கள் மற்றும் தடுப்பணைகளை தவிர வேறு வழியில்லை. குளங்களில் நீர் இருந்தால்தான், விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும்; நிலத்தடி நீர் உயரும்.
கோவை மாவட்ட நிர்வாகம், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சாயக்கழிவுகள், ரசாயன கழிவுகள் மற்றும் நகர சாக்கடையால் நொய்யல் ஆறு மிக மோசமாக மாசடைந்துள்ளது. இந்த நீரை குடிக்கும் கால்நடைகள், நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்து விடுகின்றன.
நிலத்தடி நீரிலும் விஷத்தன்மை இருப்பதால், அதை பயன்படுத்தும் பொதுமக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
குளங்களில் மீன் வளர்க்க மட்டும், தண்ணீர் இருந்தால் மட்டும் போதும் என்று கருதாமல், அந்த தண்ணீர், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பயன்பட வேண்டும் என, கருதி, கோவை மாவட்ட நிர்வாகம் நொய்யல் ஆற்று நீரை, குளங்களில் சேமித்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.