/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிப்பண்ணைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
கோழிப்பண்ணைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 18, 2025 03:25 AM

சூலுார்: சுல்தான்பேட்டை அடுத்த வடவள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுல்தான்பேட்டை அடுத்த வடவள்ளி ஊராட்சியில், மேகாடு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்கும் பணி நடக்கிறது. கோழிப்பண்ணை அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக்கூறி சுற்றுப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்தக் கோரியும், சூலுார் தாலுகா அலுவலகத்தில், மாநில பிரசார குழு தலைவர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் சண்முகம் பேசுகையில், 'கோழிப்பண்ணைக்கு எதிராக பல முறை மனு அளித்தும் பணிகள் நிறுத்தப்படவில்லை. கோழிப்பண்ணை அமைந்தால் சுற்றுவட்டார மக்கள் பல விதங்களில் பாதிக்கப்படுவர். அதனால், பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தாசில்தாரிடம் மனு அளித்துள்ளோம்,' என்றார்.
மக்கள் கூறுகையில்,'ஏற்கனவே ஊரை சுற்றி ஏராளமான கோழி பண்ணைகள் உள்ளன. கழிவுகளில் மொய்க்கும் ஈக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். புதிதாக மீண்டும் ஒரு கோழிப்பண்ணை துவங்கினால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும். அதனால், கோழிப்பண்ணை அமைக்க கூடாது,' என்றனர்.

