/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கள் அனுமதி கேட்டு பாடை போராட்டம்: பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆவேசம்
/
கள் அனுமதி கேட்டு பாடை போராட்டம்: பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆவேசம்
கள் அனுமதி கேட்டு பாடை போராட்டம்: பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆவேசம்
கள் அனுமதி கேட்டு பாடை போராட்டம்: பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆவேசம்
ADDED : மார் 27, 2025 07:10 AM

பொள்ளாச்சி : கள்ளுக்கு அனுமதி கொடுக்காததால், பொள்ளாச்சியில் விவசாயிகள் பாடை கட்டி வந்து நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த விவசாயிகள், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் இருந்து, தென்னை ஓலைகளால் பாடை கட்டி, கள் பானையை தொங்கவிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.
சப்-கலெக்டர் அலுவலகம் முன், கோஷங்களை எழுப்பி, கள் இறக்க அனுமதி கோரினர். தொடர்ந்து, குறைதீர் கூட்டத்தில், பொறுப்பு சப்-கலெக்டர் விஸ்வநாதனிடம், விவசாயி பாலசுப்ரமணியன் தலைமையிலான விவசாயிகள் மனு கொடுத்து, கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
தென்னை மரங்கள், கடந்த, 15 ஆண்டுகளாக நோய்கள் மற்றும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு டிராக்டர் தண்ணீர், 2,500 ரூபாய் விலை கொடுத்து வாங்கினால், 15 தென்னை மரங்களுக்கு மட்டுமே ஊற்ற முடிந்தது. 4 ஏக்கர் தென்னையை காக்க, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டது.
இந்தியாவில், பல மாநிலங்களில் தென்னையில் இருந்து கள் இறக்க, அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அது போல தமிழகத்திலும் கள்ளுக்கடை திறக்க வேண்டும். கேரளா வியாபாரிகள், தமிழகத்தில் கள் இறக்கி, கேரளாவுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி தர வேண்டும். தமிழகத்தில், ஒரு தென்னை மரத்துக்கு ஒரு ஆண்டு குத்தகை, 800 ரூபாயாகும். கேரளா வியாபாரிகளுக்கு கொடுத்தால், 20,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், தமிழக முதல்வர் வீட்டின் முன் அனைத்து விவசாயிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.