ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ... விவசாயிகள் வரணும் :கொப்பரை ஏலத்துக்கு சிட்டா, அடங்கல் அவசியம்சாயிகள் வரணும்!
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ... விவசாயிகள் வரணும் :கொப்பரை ஏலத்துக்கு சிட்டா, அடங்கல் அவசியம்சாயிகள் வரணும்!
UPDATED : ஜூலை 04, 2026 05:49 AM
ADDED : ஜூலை 03, 2026 05:40 PM

ஆனைமலை: 'ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மறைமுக ஏலத்தில் விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் வகையில், சிட்டா, அடங்கல் நகலுடன் நேரில் வர வேண்டும்,' என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தெற்கில், 10,800 ெஹக்டேர், வடக்கு, 16,200 ெஹக்டேர், ஆனைமலை, 25,000 ஹெக்டேர், கிணத்துக்கடவு, 12ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்னை மரங்களில் இருந்து இளநீர், தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. கொப்பரை உலர்களங்களில் கொப்பரை உற்பத்தி செய்து காங்கேயம் மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகின்றன. தேங்காய், கொப்பரை மட்டுமின்றி, மட்டைகள் தென்னை நார் தயாரிக்கவும், தேங்காய் சிரட்டை கார்பன் தயாரிக்கவும் அனுப்பப்படுகின்றன.
இதில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் கொப்பரை விற்க, மறைமுக ஏலம் நடத்தப்படுகிறது. விவசாயிகள், வியாபாரிகள் நேரடியாக பங்கேற்று பயன்பெறும் வகையில் இந்த ஏலம் நடத்தப்படுகின்றன.
முதல் தர கொப்பரை, இரண்டாம் தர கொப்பரை என, தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிகளவு கொப்பரை கொண்டு வந்து பயன்பெறுகின்றனர்.
இந்நிலையில், கொப்பரை மறைமுக ஏலத்தில் விவசாயிகளை விட, வியாபாரிகள் அதிகளவு பயன்பெறுவதாகவும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ளதாகவும் புகார் எழுந்தது. ஒரு சிலர் நேரடியாக வராமல், வாகனங்களில் கொப்பரையை ஏற்றி அனுப்புகின்றனர். இதனால், விவசாயிகள் நேரடியாக பயன் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. விவசாயிகள் பெயரில், கொப்பரை கொண்டு செல்வோருக்கு கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
விவசாயிகள் முழு பலனை பெற வேண்டும் என்பதற்காக, ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, கொப்பரைக்கு மறைமுக ஏலம் நடத்தப்படுகிறது. ஆனால், இதுபோன்ற புகார்களால் விவசாயிகள் பயன்பெறுகின்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணவும், விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் ஆலோசித்து தீர்வு காண முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:
ஆனைமலை ஒழங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் பயன்பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 7ம் தேதி ஆனைமலை விற்பனை கூடத்தில் நடைபெறும் கொப்பரைக்கான மறைமுக ஏலத்தில், விவசாயிகளுக்கு பலன் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு, விவசாயிகள் அனைவரும் தங்களுடைய சிட்டா, அடங்கல் நகல்களை அவசியம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, விவசாயிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முழு பலன் நேரடியாக கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
