/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில முடக்கத்தால் விவசாயிகள் தவிப்பு 23 மாதங்கள் ஆச்சு! பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை
/
நில முடக்கத்தால் விவசாயிகள் தவிப்பு 23 மாதங்கள் ஆச்சு! பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை
நில முடக்கத்தால் விவசாயிகள் தவிப்பு 23 மாதங்கள் ஆச்சு! பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை
நில முடக்கத்தால் விவசாயிகள் தவிப்பு 23 மாதங்கள் ஆச்சு! பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை
ADDED : ஜன 28, 2024 11:26 PM
அன்னுார்:கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணி முடங்கி
கிடக்கிறது. 23 மாதங்களாக நிலத்தை விற்கவும் முடியாமல், அடமானம் வைக்கவும்
முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டியில், தினமும் காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட தொலைவில் வரிசையில் நிற்கின்றன.
இதற்கு தீர்வாக புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக, அன்னுார் மக்கள் சார்பில், எம்.எல்.ஏ., எம்.பி., கலெக்டர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு பல மனுக்கள் அனுப்பப்பட்டது.
இதையடுத்து 2020ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குரும்பபாளையத்தில் சாலை துவங்கி, 19 கி.மீ., சென்று, அன்னுாரை அடைகிறது.
பின்னர் புளியம்பட்டி, சத்தி வழியாக கர்நாடக எல்லை வரை 96 கி.மீ., தொலைவுக்கு இந்த புறவழிச் சாலை அமைகிறது.
சில இடங்களில் ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இடத்தில் புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது,
இதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கற்கள் நடப்பட்டன. கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2022 பிப்ரவரியில் புறவழிச்சாலை அமையும் இடங்களில் உள்ள நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து அன்னுார், பெரிய நாயக்கன் பாளையம், புளியம்பட்டி, சத்தி சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பிட்ட எஸ்.எப். எண்கள் தரப்பட்டன. அவை வாங்கவோ, விற்கவோ முடியாதபடி தடை விதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டார்.
ஆனால் இந்த பணிகள் நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை.
இதுகுறித்து அன்னூர் பொதுமக்கள் கூறுகையில், ' தினமும் அன்னுார் மார்க்கத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
அரசு விரைவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச் சாலை பணிகளை துவக்க வேண்டும். சந்தையில் உள்ள நிலத்தின் மதிப்புக்கு மூன்று மடங்கு தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும்,' என்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''கருத்து கேட்பு கூட்டத்தில் 90 சதவீதம் பேர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தோம். நிலத்தை முடக்கி 23 மாதங்கள் ஆகிவிட்டது.
முடக்கமும் நீக்கப்படவில்லை நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் துவங்கவில்லை. துவங்காத பணிக்கு இரண்டு ஆண்டுகளாக எங்கள் நிலத்தை முடக்கி வைத்ததால் பலரும் தங்கள் குடும்பத் தேவைக்காக நிலத்தை விற்க முடியவில்லை.
அடமானம் வைத்து கடன் பெற முடியவில்லை. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை நேரில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றனர்.