/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாக்கு விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்
/
பாக்கு விவசாயத்துக்கு மாறும் விவசாயிகள்
ADDED : ஆக 14, 2025 08:58 PM

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், காய்கறி பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், வனவிலங்குகள் தொந்தரவாலும், பாக்கு விவசாயத்துக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்.
கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், தொண்டாமுத்துார் வட்டார பகுதி உள்ளது. கோவையின் ஜீவ நதியான நொய்யல் ஆறு, இப்பகுதியில் உருவாகிறது.
நீர்வளம், மண் வளமிக்க பகுதி என்பதால், விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. சில ஆண்டுகளாக, விளை பயிர்களுக்கும் சரியான விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க, குறுகிய கால பயிர்களான காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதை தவிர்த்து விட்டு, நீண்டகால பயிரான, பாக்கு விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். பாக்கு நடவு செய்ததில் இருந்து, நான்கு ஆண்டுகளுக்கு பின்பே, பாக்கு அறுவடைக்கு தயாராகும். பாக்கு எப்போதும் விலை வீழ்ச்சியடையாமல் இருப்பதால், நல்ல லாபமும் கிடைக்கிறது; பராமரிப்பு செலவும் குறைகிறது. இந்தாண்டு, தொண்டாமுத்துார் வட்டாரத்தில், பல இடங்களிலும், பாக்கு நடவு செய்யப்பட்டுள்ளது.

