/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயம் செய்யாத காலத்துக்கு குத்தகை வசூல்; தடை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
/
விவசாயம் செய்யாத காலத்துக்கு குத்தகை வசூல்; தடை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயம் செய்யாத காலத்துக்கு குத்தகை வசூல்; தடை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
விவசாயம் செய்யாத காலத்துக்கு குத்தகை வசூல்; தடை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2025 08:48 PM
மேட்டுப்பாளையம்; 'பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், விவசாயம் செய்யாத காலத்துக்கு குத்தகை வசூலிப்பதை தடை செய்ய வேண்டும்' என, பவானி ஆற்று நீர்ப் பாசன விவசாயிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பவானிசாகர் அணையின் தண்ணீர், சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு வரை, பவானி ஆற்றின் இரண்டு பக்கம், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேங்கியுள்ளது.
அணையில் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில், தண்ணீர் தேங்கி இருந்த இடங்களில், பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் அனுமதியின்படி, விவசாயிகள் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
குத்தகை குறித்து, பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மேட்டுப்பாளையம் தாலுகா, பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில், தண்ணீர் தேக்கம் குறையும்போது, பொதுப்பணித் துறை நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி, அணையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலத்தில், விவசாயம் செய்வது வழக்கம்.
அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளும், நிலம் இல்லாத ஏழை விவசாயிகள், 500க்கும் மேற்பட்டவர்கள், நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக அணையில் தண்ணீர் குறையவில்லை. அதனால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை. குத்தகை தொகையையும் செலுத்தவில்லை. ஆனால் பவானிசாகர் நீர்வளத்துறை நிர்வாகத்தினர், குத்தகை செலுத்த விவசாயிகளை நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் குத்தகை தொகை, 10 சதவீதம் உயர்த்தியதால், தற்சமயம் ஏக்கர் ஒன்றுக்கு, 1,400 ரூபாயை குத்தகை செலுத்தி வருகின்றனர். இந்தத் தொகை அதிகமானதாக உள்ளது.
சூறாவளிக்காற்று போன்ற இயற்கை சீற்றத்தால், விவசாய பயிர்கள் சேதம் அடையும் போது, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவது உண்டு. எனவே குத்தகை தொகையை பாதியாக குறைத்தும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 15 சதவீதம் குத்தகை உயர்த்தி, விவசாயிகளின் குத்தகை சுமையை குறைக்க வேண்டும்.
விவசாயம் செய்யாத காலத்திற்கு, குத்தகை வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும். குத்தகை நிலுவைத் தொகையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.