/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உபரிநீர் வீணாகாமல் தடுக்க திட்டம்; விவசாயிகள் வலியுறுத்தல்
/
உபரிநீர் வீணாகாமல் தடுக்க திட்டம்; விவசாயிகள் வலியுறுத்தல்
உபரிநீர் வீணாகாமல் தடுக்க திட்டம்; விவசாயிகள் வலியுறுத்தல்
உபரிநீர் வீணாகாமல் தடுக்க திட்டம்; விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2025 07:43 PM

பொள்ளாச்சி; ஆழியாறு, பாலாற்றில் இருந்து ஆறு வழியாக கேரளாவுக்கு செல்கிறது. இதை சேகரிக்க ஆற்றில் தடுப்பணைகள் கட்டலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை முழு கொள்ளளவான 120 அடியில், 119 அல்லது 119.80 அடி வரை தான் சேமிக்க முடியும். பாசனம் மற்றும் கேரளாவுக்கு ஒப்பந்தப்படி நீர் வினியோகிக்கப்படுகிறது. மழைக்காலங்களில், நீர் வரத்து அதிகரிப்பதால், அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நீர் ஆழியாறு ஆற்று வழியாக மணக்கடவு, மூலத்தாரா அணைக்கு செல்கிறது; அங்கிருந்து, அரபிக்கடலில் கலக்கிறது.
வீணாகும் தண்ணீர் சேமிக்க முடியாததால், ஆண்டிற்கு ஆண்டு மழைக்காலங்களில், அதிகளவு தண்ணீர் கடலில் கலப்பது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது. இதுபோன்று மழைக்காலங்களில், தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாகுவது தொடர்கதையாகி வருகிறது.
நீரை சேமிக்கலாமே... ஆழியாறு அணையிலிருந்து மணக்கடவிற்கு 40 கி.மீ., துாரம் பயணித்து, தண்ணீர் செல்கிறது. இந்த இடைப்பட்ட பகுதிகளான அம்பராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்கவோ அல்லது பராமரிப்பில்லாத தடுப்பணைகள் சீரமைக்கலாம்.
அதன் வாயிலாக கேரளாவிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் மாதந்தோறும் வழங்கலாம்; உபரி நீரும் வீணாக கடலில் கலப்பது தடுக்க முடியும்.
இதற்காக பல ஆண்டுகளுக்கு முன், ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி என ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தடுப்பணை கட்டலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதன் வாயிலாக பெரிய அளவில் தண்ணீர் வீணாகுவதை தடுக்காவிட்டாலும், தேக்கி வைப்பதால், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கேரள அரசு அனுமதி மறுத்ததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், ஆண்டுதோறும் குறிப்பிட்ட டி.எம்.சி., தண்ணீர் வீணாகுவது தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மழைக்காலங்களில், அணை நிரம்பி வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில், தடுப்பணை கட்டுவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
இந்த நீண்ட கோல கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், பாலாற்றில் இருந்து அதிகளவு நீர் ஆற்றில் கலந்து கேரளாவுக்கு தான் செல்கிறது. இந்த நீரும் வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் கட்டவோ அல்லது உபரிநீரை, குளங்களுக்கு திருப்பி விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.