/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றி தொல்லை விவசாயிகள் கவலை
/
காட்டுப்பன்றி தொல்லை விவசாயிகள் கவலை
ADDED : ஜன 28, 2025 06:58 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் மீண்டும் காட்டுப்பன்றி தொல்லை அதிகரிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் சுற்றுப்பகுதி விவசாயிகள் தென்னை, வாழை, காய்கறி பயிர்கள் அதிகம் சாகுபடி செய்துள்ளனர். இதில், சொக்கனூர் அருகே உள்ள முத்துக்கவுண்டனூர் பகுதியில் கடந்த ஆண்டு காட்டுப்பன்றி தொல்லையால் விவசாயிகள் பலர், கிழங்கு மற்றும் வாழை போன்ற பயிர் சாகுபடியில், குறைந்த அளவே மேற்கொண்டனர்.
நாளடைவில், காட்டுப்பன்றி தொல்லை குறைந்தது. இதனால், விவசாயிகள் கிழங்கு வகை பயிர் சாகுபடியை மீண்டும் துவங்கினர். தற்போது மீண்டும் காட்டுப்பன்றி தொல்லை அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முன்னாள் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ''சொக்கனூர் ஊராட்சியில் உள்ள நீரோடை பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் அதிக அளவில் தென்படுகின்றன. இரவு நேரத்தில் விளை நிலத்திற்குள் நுழைவதால் கால்நடைகள் அச்சப்படுகிறது.
மேலும், விளைநிலத்தில் மண்ணை பறித்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் கிழங்கு வகை பயிர்கள் விதைப்பு செய்வதை தவிர்த்து வருகின்றனர். எனவே, காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.