/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளால் காலியாகும் விவசாயம்: நடவடிக்கை தேவை
/
காட்டுப்பன்றிகளால் காலியாகும் விவசாயம்: நடவடிக்கை தேவை
காட்டுப்பன்றிகளால் காலியாகும் விவசாயம்: நடவடிக்கை தேவை
காட்டுப்பன்றிகளால் காலியாகும் விவசாயம்: நடவடிக்கை தேவை
ADDED : மார் 07, 2024 03:46 AM
உடுமலை, : ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக எல்லையை ஒட்டிய கிராமங்களில், பல ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளால், தொடர் சேதம் ஏற்பட்டு வருகிறது.
மானுப்பட்டி, சின்னகுமாரபாளையம், கொங்குரார்குட்டை, ஜல்லிபட்டி, தளி, ஆண்டியூர், தேவனுார்புதுார், வல்லக்குண்டாபுரம் உட்பட மலையடிவார கிராமங்களில், காட்டுப்பன்றிகளால், சாகுபடியை கைவிடும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில், வன எல்லையில் இருந்து, சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள காட்டுப்பன்றிகள், இனப்பெருக்கம் செய்து, பல கிராமங்களில், நிரந்தரமாக முகாமிட்டுள்ளன.
வனத்தின் எல்லையில், இருந்து வெகு தொலைவு தள்ளி அமைந்துள்ள கிராமங்களிலும், விளைநிலங்களில், பயிர் சாகுபடி செய்யவும், தேங்காய்களை இருப்பு வைக்கவும், அச்சப்படும் அளவுக்கு காட்டுப்பன்றிகளின் பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, ராகல்பாவி, கணபதிபாளையம், வாளவாடி, விருகல்பட்டி, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம் உட்பட கிராமங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், குறிப்பிட்ட இடைவெளியில் பயிர் சேதம் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, கிணற்றுப்பாசனத்துக்கு, பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு, மேற்கொள்ளப்படும், தக்காளி, பீட்ரூட் உட்பட காய்கறி சாகுபடிகளும், நீண்ட கால சாகுபடிக்காக நடவு செய்யப்படும் தென்னங்கன்றுகளும், காட்டுப்பன்றிகளின் முக்கிய இலக்காக உள்ளது.
மழை நீர் ஓடைகள், பள்ளம் உட்பட அடர்த்தியான புதர்கள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கும் காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில், விளைநிலங்களில், புகுந்து, தென்னங்கன்றுகளின் குருத்துகளை ருசி பார்த்து திரும்புகின்றன.
பத்துக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் குழுவாக விளைநிலங்களுக்குள் புகுவதால், காய்கறி செடிகள் முற்றிலுமாக சேதமடைகின்றன. பீட்ரூட் போன்ற கிழங்கு வகைகள் அறுவடைக்கு தயாராகும் போது, அவற்றை, சேதப்படுத்தி விடுவதால், விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: நீண்ட கால மற்றும் குறுகிய பயிர் சாகுபடியில், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல், பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவையே பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக இருந்தன. ஆனால், தற்போது, குறுகிய கால காய்கறி சாகுபடிக்கு பெரிய அச்சுறுத்தலாக, காட்டுப்பன்றிகள் உருவாகியுள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த, விளைநிலங்களின் வரப்புகளில், வண்ண சேலைகளை கட்டுதல் உட்பட ஒவ்வொரு சாகுபடிக்கும் பல ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவாகிறது.
தோப்புகளில், இருப்பு வைத்துள்ள தேங்காய்களை, உரித்து தின்பதால், தென்னை சாகுபடியிலும் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளது.
சில நேரங்களில், தோட்டத்து சாளைகளில் வசிப்பவர்களும், காட்டுப்பன்றிகள் தாக்குதலுக்கு ஆளாகி காயமடைகின்றனர். அடிக்கடி இடம் பெயர்ந்து, தொடர் சேதம் ஏற்படுத்தும், காட்டுப்பன்றிகளால், கோடை கால சீசனில், பலர் சாகுபடியை கைவிட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தால், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிவாரணத்துக்கும் பல்வேறு விதிமுறைகளை தெரிவித்து அலைக்கழிக்கின்றனர்.
காட்டுப்பன்றிகளால், உடுமலை தாலுகாவில், காய்கறி சாகுபடி பரப்பு முற்றிலுமாக கைவிடப்படும் முன், வனத்துறையின் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால், வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

