/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயம் வேண்டாம்; பாதுகாப்பு முக்கியம்!
/
பயம் வேண்டாம்; பாதுகாப்பு முக்கியம்!
ADDED : ஜன 05, 2024 01:18 AM

'தமிழகத்தில் 'இன்ப்ளூயன்சா எச்3என்2' எனப்படும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவோடு, மீண்டும் கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பாக இருப்பது அவசியம்,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தொற்று நோயியல் துறை நிபுணர் வருண் சுந்தரமூர்த்தி.
அவர் கூறியதாவது:
இன்ப்ளூயன்சா வைரஸ் எட்டு வகைகள் உள்ளன. இதில் 'ஏ' வகையை சேர்ந்த ஒரு திரிபுதான் எச்3என்2.
கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் மாற்றங்களை அடைந்து திரிபுகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறதோ அதுபோல், இன்ப்ளூயன்சா வைரசும் ஒவ்வொரு ஆண்டும் சீசனல் காய்ச்சலாக மக்களிடையே பரவும்போது, உருமாறிகொண்டே செல்கிறது.
பறவைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு இடம்பெயரும்போது, இன்ப்ளூயன்சா பாதிப்பு உருவாகும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாதம் துவங்கி டிசம்பர் மாதத்தில் முடியும்.
இன்ப்ளூயன்சா வேகமாக பரவக்கூடியது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்.
சளி, இருமல் அதிக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, தும்மல், மூக்கடைப்பு, தொண்டைப்புண், கண்களில் நீர் வடிதல் பொதுவான அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் ஒரு வாரத்துக்குப்பின் குணமாகிவிடும்.எனினும், இம்முறை காய்ச்சல் சற்று தீவிர தன்மையுடன் காணப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும், பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், புற்றுநோய், நுரையீரல், இருதயம், கல்லீரல், சீறுநீரகம், சர்க்கரை, நரம்பியல் பாதிப்பு உள்ளோர் கவனமாக இருக்க வேண்டும்.
புதிதாக ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பழைய வைரசை ஒத்துள்ளதால், ஏற்கனவே போட்ட தடுப்பூசி பயனளிக்கும். எனவே அதையே நாம் பயன்படுத்தலாம்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 97901 97971என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.