ரயில் பயணியர் சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு! பிரச்னைகளுக்கு தீர்வு காண புது முயற்சி
ரயில் பயணியர் சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு! பிரச்னைகளுக்கு தீர்வு காண புது முயற்சி
UPDATED : ஆக 28, 2026 02:08 AM
ADDED : ஆக 27, 2026 06:21 PM

கோவை: மக்களின் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் உதாசீனம் செய்வதாக கூறி, பயணியர் சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.
தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்பு என்பது அதன் பெயர். தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 4 ரயில்வே கோட்டங்களில் இருந்தும் கூட்டமைப்புக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 26 நிர்வாகிகள் கொண்ட குழு, கூட்டமைப்பை வழி நடத்தும்.
தமிழகத்தில் 4 கோட்டங்களில் இருந்து 36 சங்கங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து ஒரு சங்கம் என, 37 சங்கங்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளன. சேலம் கோட்டத்தில் போத்தனுார், திருப்பத்துார், பொம்மிடி, மொரப்பூர், டேனிஷ்பேட்டை, நாமக்கல், தாசம்பட்டி ஆகிய ஊர்களில் செயல்படும் 7 சங்கங்கள் இதில் சேர்ந்துள்ளன. இவை பயணியர் அல்லது பயனாளர் என வெவ்வேறு பெயர்களை கொண்டுள்ளன.
போத்தனூர் சுப்பிரமணியன் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். கூட்டமைப்பு உருவாக்க காரணம் என்ன என்பதை அவர் விவரித்தார்:
தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்டுவதில்லை. பயணியர் சங்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகளை பரிசீலிப்பது இல்லை. சில கோட்ட அதிகாரிகள் நமது சங்கங்களை மதிப்பதே இல்லை.
சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டுவது கோவை ரயில் நிலையம். இருந்தும் கோவை சந்திப்பு, வடகோவை, பீளமேடு, போத்தனுார் என ஒவ்வொரு ஸ்டேஷனின் வளர்ச்சிக்கும், பயணிகளின் தேவைக்கும் போராட வேண்டியிருக்கிறது. நீண்டகாலமாக எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை.
அதிகாரிகள் சந்திக்க மறுப்பதால் பயணிகள் தபால் அல்லது மின்னஞ்சல் வழியாக கோரிக்கைகளை அனுப்புகின்றனர். ஒரு ஸ்டேஷனில் ரயிலை நிறுத்துவது, புது ரயில் அல்லது கூடுதல் பெட்டிகள் கேட்பது, பண்டிகைக்கு தனி ரயில்கள் விடுவது போன்ற எந்த பிரச்னையையும் எழுப்ப முடியவில்லை.
அதிகாரிகளின் அலட்சியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, கூட்டமைப்பு உருவாக்கி இணைந்து செயல்பட முடிவு செய்தோம். பயணியரின் பிரச்னைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காணவே விரும்புகிறோம். அதிகாரிகள் உதாசீனம் தொடர்ந்தால் போராடவும் தயாராக இருக்கிறோம்.
