/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீவன தட்டுப்பாடு: ஆவினுக்கு பால்வரத்து சரிவு
/
தீவன தட்டுப்பாடு: ஆவினுக்கு பால்வரத்து சரிவு
ADDED : ஆக 02, 2025 11:46 PM
அன்னுார்: 'மழை குறைந்தது மற்றும் தீவனம் தட்டுப்பாடால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்துள்ளது,' என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 9,200க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவினுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக போதிய மழை இல்லாமல் கால்நடை தீவன தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தீவன விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதை விவசாயிகள் குறைத்துள்ளனர். இதனால், பால் சுரப்பதும் குறைந்துள்ளது.
இது குறித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், சராசரியாக ஆவினுக்கு சப்ளையாகி வரும் பால் அளவு 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. குறிப்பாக அன்னுார், காரமடை, சிறுமுகை, கருவலுார் பகுதியில் ஆவினுக்கு பால் வரத்து குறைந்துள்ளது.
இதை சரி செய்ய அரசு உடனடியாக மானிய விலையில் தீவனங்களை வழங்க வேண்டும். பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்,'' என்றனர்.

