ADDED : டிச 31, 2024 07:48 AM

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மங்களக்கரை புதூர் பகுதியில் குட்டியுடன் பெண் யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட நெல்லி மலை வனப்பகுதியில் யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது.
இந்த வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகில் உள்ள ஊர்களுக்கு வருவது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை நெல்லிமலையில் இருந்து குட்டியுடன் ஒரு பெண் யானை வெளியேறி அருகில் உள்ள மங்களக்கரை புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உலா வந்தது.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை வனத்துறையினர், ஒருங்கிணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து, யானையை ஊருக்குள் வராமல் தடுத்தனர்.
மேலும் மங்களக்கரை புதூர் பகுதியில் மக்கள் யானையை பார்க்க கூட்டமாக வந்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி காரமடை போலீசார் உதவியுடன், வனத்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
பின் வனத்துறை குழுவினர் குட்டியுடன் உள்ள பெண் யானையை நெல்லி மலை காப்பு காட்டிற்குள் மீண்டும் விரட்டினார்கள்.