ADDED : செப் 21, 2026 07:24 PM
உடுமலை: வெயிலின் தாக்கம் குறைந்து, பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் சாதாரண காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. காய்ச்சல் பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக, இன்ப்ளூயன்ஸா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மற்றும் இணை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், தொடர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, உடல்வலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முந்தைய ஆண்டுகளில் சாதாரண காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவிய பகுதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளாக ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பருவநிலை மாறும் காலங்களில் காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் நுரையீரலை பாதிக்கும் தொற்றுகள் அதிகரிப்பது இயல்பு.
தற்போது ஆர்.எஸ்.வி., இன்ப்ளூயன்ஸா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் ஏற்பட்டாலே டெங்கு என அச்சப்பட தேவையில்லை,’ என்றனர்.
