ADDED : செப் 21, 2026 07:24 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு பள்ளி முன்பாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாததால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு விளையாட்டு வகுப்பு வரும்போது பள்ளி வளாகத்துக்கு வெளியே சர்வீஸ் ரோட்டை கடந்து மைதானம் செல்லும் நிலை உள்ளது.
இதனால், வாகன ஓட்டுநர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு சார்பில், பள்ளி முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது.
தற்போது, சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணிகள் முடிந்து, பள்ளி முன்பாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடையில் வெள்ளை நிற கோடுகள் ஒரே நாளில் மறைய துவங்கியுள்ளது.
இதனால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகிறார்கள். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி வேகத்தடையில் வெள்ளை நிற குறுக்கு பட்டையுடன், ஒளிபிரதிபலிப்பான் அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
