/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகர பகுதியில் தாயுமானவர் திட்டத்துக்கு கள ஆய்வு துவக்கம்! பயனாளிகளை சந்தித்து விபரம் சேகரிப்பு
/
நகர பகுதியில் தாயுமானவர் திட்டத்துக்கு கள ஆய்வு துவக்கம்! பயனாளிகளை சந்தித்து விபரம் சேகரிப்பு
நகர பகுதியில் தாயுமானவர் திட்டத்துக்கு கள ஆய்வு துவக்கம்! பயனாளிகளை சந்தித்து விபரம் சேகரிப்பு
நகர பகுதியில் தாயுமானவர் திட்டத்துக்கு கள ஆய்வு துவக்கம்! பயனாளிகளை சந்தித்து விபரம் சேகரிப்பு
ADDED : ஜன 08, 2025 11:18 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேடிச்சென்று, 'மொபைல் ஆப்' வாயிலாக விபரங்களை பதிவு செய்து அரசுக்கு அனுப்பும் பணியில், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், வறுமையை ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களை முன்னேற்றும் வகையில், முதல்வரின் தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள ஐந்து லட்சம் ஏழை குடும்பத்தினருக்கு, அரசின் உதவிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஆதரவற்றோர், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள்,மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வசிக்கும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் என, சமூகத்தின் விளிம்புநிலையில் வசிக்கும் மக்கள் அனைவரும், இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு உள்ளிட்டவை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள்,அரசின் எந்த திட்டங்களிலும் பலன் பெறாதவர்களை கண்டறிந்து, இத்திட்டத்துக்கு சேர்க்கும் வகையில் பணிகளை குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு வார்டுக்கும், இரண்டு பேர் வீதம் சென்று, சென்னையில் இருந்து வந்த பட்டியலில் உள்ளவர்களின் மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களது விபரங்களை, 'தாயுமானவர் திட்டம்' என்ற, 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு செய்து வருகின்றனர். அதில், பயனாளிகள் மொபைல்போன் எண், ஆதார் எண், சொந்த வீடா, ஓட்டு வீடா, வாடகை வீடா; வேலைக்கு செல்பவரா, வாகனம் உள்ளதா உள்ளிட்ட விபரங்கள் கேட்டறிந்து பதிவு செய்யப்படுகிறது.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சி மகளிர் சுய உதவிக்குழுவினர் வாயிலாக, தாயுமானவர் திட்டத்துக்கான களப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசு கொடுத்த பட்டியலில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து, 'மொபைல் ஆப்' வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இதற்கான களப்பணிகள் கடந்த, ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு, கூறினர்.

