பி.ஏ.பி., அலுவலகத்தில் பாசன விவசாயிகள் போராட்டம்! விதிமுறை மீறி ஏரிக்கு நீர் திறப்பால் ஆவேசம்
பி.ஏ.பி., அலுவலகத்தில் பாசன விவசாயிகள் போராட்டம்! விதிமுறை மீறி ஏரிக்கு நீர் திறப்பால் ஆவேசம்
UPDATED : ஜூலை 09, 2026 06:38 PM
ADDED : ஜூலை 09, 2026 05:30 PM

பொள்ளாச்சி: திருமூர்த்தி அணையில் இருந்து, பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறக்க பெறப்பட்ட அரசாணையை எதிர்த்து, பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பாசன விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும் சூழலில், உடுமலை அருகே பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமையில், திட்டக்குழு, பாசன சபை தலைவர்கள், விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின், கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயனை சந்தித்து திட்டக்குழுவினர் வாக்குவாதம் செய்தனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
முதலாம் மண்டல பாசனத்துக்கு, 5வது சுற்றுக்கு, பி.ஏ.பி., அணை நீர் இருப்பு குறைவாக உள்ளதால், முழு சுற்று வழங்க முடியாது. அரை சுற்று தண்ணீரே வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்ததற்கு திட்டக்குழு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள், தண்ணீர் இருப்பை கணக்கிட்டு, அரை சுற்று முழுமையாக வழங்க இயலாது; ஐந்து நாட்கள் பாயும் மடைகளுக்கு, இரண்டு நாளும், ஏழு நாட்கள் பாயும் மடைகளுக்கு, மூன்று நாட்களும் வழங்கலாம் என, தீர்மானம் நிறைவேற்றி வரும், 18ம் தேதி வரை தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பி.ஏ.பி., பாசனத்துக்கு சம்பந்தம் இல்லாத பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்து அரசாணை பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது. பாசனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஏரிக்கு நீர் வழங்க அரசாணை பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டது. அதில், திருமூர்த்தி அணை நிரம்பி, பாரதப்புழாக்கு உபரி நீர் செல்லும் போது, ஏரிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தற்போது, நீர் பற்றாக்குறை உள்ள நிலையில், பாசனத்துக்கு நீர் அளவை குறைத்து வழங்கிய நிலையில், பூசாரிநாயக்கன் ஏரிக்கு எப்படி பரிந்துரை செய்தனர் என தெரியவில்லை.
தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை சட்டத்தின் கீழ், திட்டக்குழு ஒப்புதல் இல்லாமல் நீர் வினியோகம் இருக்க கூடாது என கூறியதை அதிகாரிகள் மீறியுள்ளனர். கடந்த, 2012ல் சட்டத்தை மீறியதால் வருவாய்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், இனி திட்டக்குழு ஒப்புதல் இல்லாமல், பரிந்துரை செய்ய மாட்டோம் என உத்தரவாதம் அளித்து கையெழுத்திடப்பட்டது. ஆனால், அதையும் அதிகாரிகள் மீறியது வருத்தம் அளிக்கிறது.
இது குறித்து, அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியதில், ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை என அதிகாரிகள் உறுதியளித்தனர். தலைமை பொறியாளர், கண்காணிப்புபொறியாளர், கலெக்டர், திட்டக்குழு பேச்சு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.
இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றன. இதுபற்றி விளக்கம் பெற, கண்காணிப்பு பொறியாளரை பல முறை தொடர்பு கொண்டும், அவர் பதிலளிக்கவில்லை.
