/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பு; புகைமூட்டத்தால் மக்கள் பரிதவிப்பு
/
நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பு; புகைமூட்டத்தால் மக்கள் பரிதவிப்பு
நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பு; புகைமூட்டத்தால் மக்கள் பரிதவிப்பு
நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பு; புகைமூட்டத்தால் மக்கள் பரிதவிப்பு
ADDED : செப் 14, 2025 11:07 PM

வால்பாறை; வால்பாறை நகராட்சி குப்பை கிடங்கில், தீ வைக்கப்படுவதால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகராட்சி சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் உள்ள திறந்தவெளி குப்பைக்கிடங்களில் நாள்தோறும் எட்டு டன் குப்பை கொட்டப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் நடக்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக குப்பைக்கிடங்கில் தீ வைக்கப்படுவதால் நாள் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் உள்ள, திறந்தவெளி குப்பைக்கிடங்கு அருகில் குடியிருப்பு பகுதியில், அரசு கலைக்கல்லுாரியும் அமைந்துள்ளது. குப்பைக்கிடங்கில் வைக்கப்பட்ட தீயினால் ஏற்படும் புகை மூட்டத்தால், மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குப்பை உள்ளிட்ட கழிவுகளிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தாலும், புகை மண்டலத்தாலும் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நகரை துாய்மையாக பராமரிக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைக்கு பின் வெயில் நிலவுவதால், கடந்த இரண்டு நாட்களாக நாள் தோறும் வெளியாகும் நோய் தொற்று பரவாமல் தடுக்க குப்பைக்கிடங்கில் எரிக்கப்படுகிறது.
இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. குப்பையில் மழை நீர் தேங்கியதால் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மக்கும் குப்பையில் உரம் தயாரிப்பதை தீவிரப்படுத்தும் போது, துர்நாற்றம் ஏற்படுவது குறையும்.
இவ்வாறு, கூறினர்.