ADDED : பிப் 16, 2024 02:06 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 5 முறை மேட்டுப்பாளையம் கோவை இடையே மெமு ரயில் இயக்கப்படுகிறது.
தவிர தினமும்சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும், திருநெல்வேலிக்கு வாரம் ஒருமுறை சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 3:00 மணி அளவில், மேட்டுப்பாளையம் ரயில்நிலைய மேலாளர் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதிகாலை நேரம் என்பதாலும், அறையில் யாரும் இல்லாததாலும், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அறை முழுவதும் எரிந்து நாசமானது. பேனல் போர்டுகள் உள்ளிட்ட இயந்திரங்கள் சேதமடைந்தன.
ரயில்வே அதிகாரிகள், உடனடியாக மாற்று அறையில் ரயில்களை இயக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் செய்தனர். ரயில் போக்குவரத்திற்கு எந்த தடையும் ஏற்படவில்லை.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மரிய மைக்கேல் கூறுகையில், ''ரயில்கள் தடையின்றி இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மாற்று அறையில் தற்காலிகமாக நிலைய மேலாளர் அறை அமைக்கப்படும். தீ விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்,'' என்றார்.