ADDED : ஏப் 07, 2025 05:07 AM

சூலுார்; சூலுார் அருகே டயர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய டயர்கள், ரப்பர் எரிந்து சாம்பலாகின.
சூலுார் அடுத்த கள்ளப் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் குடோன் உள்ளது. இங்கு, பழைய டயர்களில் இருந்து ரப்பர், கம்பிகளை பிரித்து, மறுசுழற்சி செய்யும் வேலை நடக்கிறது. ரப்பர் இருப்பு வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. தீ மள மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
குடோன் முழுக்க தீ கொழுந்துவிட்டு எரிந்தது. கரும்புகையும் பல அடி உயரத்துக்கு எழும்பியது. கிணத்துக்கடவு, சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூலுார் நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய டயர்கள், ரப்பர் தீயில் எரிந்து சாம்பலாகியது. இவ்விபத்து குறித்து சூலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

