தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
ADDED : செப் 01, 2026 06:41 PM
சூலூர்: முதல்கட்ட தீத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து, தனியார் துறை பாதுகாவலர்களுக்கு, தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.
சூலூர் தீயணைப்பு நிலையம் சார்பில், தனியார் துறை பாதுகாவலர்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி முகாம் சூலூரில் இரு நாட்கள் நடந்தது. சூலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள், பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில், பயிற்சி அலுவலர் கவி பிரசன்னா, தீத்தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார்.
அலுவலர்கள் பயிற்சியில் கூறியதாவது:
ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. மின்சார கசிவினால், மனித தவறினால், இயந்திரங்கள் உராய்வால், அதிக வெப்பத்தால் தீ விபத்துகள் ஏற்படலாம்.
எந்த பொருள் தீப்பற்றி எரிகிறது என்பதை பார்த்து, தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும்.
மரப்பொருட்கள், பஞ்சு, நூல், தென்னை நார் என்றால், தண்ணீரை கொண்டு தீயை கட்டுப்படுத்தலாம். ஆயில் பொருட்கள் என்றால் நுரையை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்த வேண்டும்.
நிறுவனத்தின் பாதுகாப்பு பணியில் உள்ள அனைவரும் அடிப்படையான தீயணைப்பு முறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அதன் மூலம் முதல்கட்ட தீயணைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். மற்றவர்களை பாதுகாக்கவும் முடியும். பயிற்சி முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தீத்தடுப்பு கருவிகள் நிறுவனங்களில் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
