/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி! சாலைபாதுகாப்பு மாதத்தில் விழிப்புணர்வு
/
அரசு பஸ் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி! சாலைபாதுகாப்பு மாதத்தில் விழிப்புணர்வு
அரசு பஸ் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி! சாலைபாதுகாப்பு மாதத்தில் விழிப்புணர்வு
அரசு பஸ் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி! சாலைபாதுகாப்பு மாதத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜன 23, 2025 11:36 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பயிற்சி நடந்தது.
அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, மாணவர்கள், பொதுமக்கள், ஊழியர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழக பயிற்சி நிலையத்தில், 'பர்ஸ்ட் ஹார்ட் பவுண்டேஷன்' அமைப்பின் வாயிலாக, முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை மண்டல ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தனியார் ஓட்டுநர்கள் மற்றும் ஐ.ஆர்.டி., மாணவர்கள் என, 165 பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி நிலைய பொறியாளர் சக்திகுமார் தலைமை வகித்தார். பயிற்சி நிலைய பொறியாளர், பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாரடைப்பு, ரத்த காயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு செய்ய வேண்டிய முதலுதவி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து ஏற்படும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணி குறித்து விளக்கப்பட்டது.
மேலும், மின்கசிவு, பாம்பு கடிப்பு, விபத்து நடந்த இடத்தில் முதலுதவி உள்ளிட்ட, 16 வகையான முதலுதவி பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதில், ஓட்டுநர்கள், தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் வாயிலாக, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளியிலிருந்து பழைய பஸ் ஸ்டாப் வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை கோவை சாலை பாதுகாப்பு அலகு, கோட்ட பொறியாளர் மனுநீதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் சென்றனர். சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து வார்டன் கமலக்கண்ணன், கிணத்துக்கடவு போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உடுமலை
நெடுஞ்சாலைத்துறை உடுமலை மற்றும் மடத்துக்குளம் உட்கோட்டங்கள் சார்பில், 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, உடுமலை, அரசு ஐ.டி.ஐ., யில், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகின் கோட்டப்பொறியாளர் முருகபூபதி, காணொலி காட்சி வாயிலாக, சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்டப்பொறியாளர் ராணி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் நதிச்சந்திரன், உதவிக்கோட்டப்பொறியாளர்கள் ராமுவேல், கார்த்திகேயன், உதவிப்பொறியாளர்கள் சிவசுப்பிரமணியம், லோகேஸ்வரன், மகேந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

