/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவல் தெய்வத்துக்கு காவலர்கள் சீர்வரிசையுடன் முதல் மரியாதை!
/
காவல் தெய்வத்துக்கு காவலர்கள் சீர்வரிசையுடன் முதல் மரியாதை!
காவல் தெய்வத்துக்கு காவலர்கள் சீர்வரிசையுடன் முதல் மரியாதை!
காவல் தெய்வத்துக்கு காவலர்கள் சீர்வரிசையுடன் முதல் மரியாதை!
ADDED : பிப் 29, 2024 08:51 PM

கோவை:கோவையின் காவல் தெய்வத்துக்கு, பெரியகடைவீதி காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசை தட்டுக்களுடன் முதல் மரியாதை செலுத்தினர்.
கோவை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும், கடைவீதி காவல் நிலையம் ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய எல்லையை கொண்டிருந்தது.
அன்றைய கால கட்டத்திலிருந்தே, இந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார், கோனியம்மன் கோவில் திருவிழாவில், அம்மனுக்கு முதல் மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அன்று முதல் இன்று வரை, அந்த பந்தம் தொடர்ந்து வருகிறது.
அழைப்பு
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் உள்ளிட்டோர் பெரியகடைவீதி காவல் நிலையத்துக்கு சென்று, தேர்த்திருவிழாவுக்கு வருகை தருமாறு, மங்கல பொருட்கள், மலர்மாலை, பரிவட்டம் ஆகியவற்றை சமர்ப்பித்து, இன்ஸ்பெக்டர் சசிகலா உள்ளிட்ட காவலர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிகலாவுக்கு, மேளதாளங்கள் முழக்க மலர் மாலை மற்றும் பரிவட்டம் அணிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் கோனியம்மனுக்கு, பட்டுசேலை, மஞ்சள், குங்குமம், வளையல், மலர் மாலை, பழங்கள், இனிப்பு உள்ளிட்டவற்றை சீர்வரிசை தட்டுக்களாக கைகளில் ஏந்தியபடி, பெரியகடைவீதி காவல்நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தேர்நிலை திடலை அடைந்தனர்.
அம்மனுக்கு மரியாதை!
அங்கு தேரில் வீற்றிருக்கும் அம்மனுக்கு சமர்ப்பித்து மரியாதை செய்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்ஸ்பெக்டர் சசிகலா உள்ளிட்டோருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தேர் பவனி வரும் பாதையில், தேரை இடையிடையே நிறுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தேருக்கு பின்னே கம்புகளோடு அணிவகுத்து வரும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், மரியாதை செய்யப்பட்டது.

