/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் வளர்ச்சி கழகம், கோழி இறைச்சிக்கு கடைகள் ஒதுக்காமல் வியாபாரிகள் முரண்டு புதிய மீன் மார்க்கெட் செயல்பாடு இழுபறி
/
மீன் வளர்ச்சி கழகம், கோழி இறைச்சிக்கு கடைகள் ஒதுக்காமல் வியாபாரிகள் முரண்டு புதிய மீன் மார்க்கெட் செயல்பாடு இழுபறி
மீன் வளர்ச்சி கழகம், கோழி இறைச்சிக்கு கடைகள் ஒதுக்காமல் வியாபாரிகள் முரண்டு புதிய மீன் மார்க்கெட் செயல்பாடு இழுபறி
மீன் வளர்ச்சி கழகம், கோழி இறைச்சிக்கு கடைகள் ஒதுக்காமல் வியாபாரிகள் முரண்டு புதிய மீன் மார்க்கெட் செயல்பாடு இழுபறி
ADDED : ஜன 23, 2025 11:56 PM
கோவை; உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட் வளாகத்தில், தமிழக அரசின் மீன் வளர்ச்சி கழகம் மற்றும் கோழி இறைச்சி கடைகள் ஒதுக்க, மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. மீன் வியாபாரிகள் மறுப்பு தெரிவிப்பதால், குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் இருந்தது; அதன் ஒரு புறத்தில் பழக்கடைகள், மற்றொருபுறத்தில் கோழிக்கடைகள் செயல்பட்டன. மேம்பாலப் பணிக்காக வணிக வளாகத்தை இடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பழக்கடைகளுக்கு புல்லுக்காடு பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது; வியாபாரிகள் இணைந்து கடைகள் கட்டிக் கொண்டனர். கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு சில்லறை மீன் மார்க்கெட் வளாகத்தில் நான்கு கடைகள் மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டன.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தற்போது மீன் மார்க்கெட்டையும் இடிக்க வேண்டியுள்ளது. இவ்வியாபாரிகளுக்கும் புல்லுக்காடு பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது; புதிய மார்க்கெட் கட்டப்பட்டது. நிலுவை வாடகை செலுத்தாததால், மார்க்கெட் திறப்பதில் இழுபறி ஏற்பட்டது. பேச்சு நடத்தியதில், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, சமீபத்தில் திறக்கப்பட்டது.
மொத்தமுள்ள, 72 கடைகளில், சீல் வைக்கப்பட்ட, 21 கடைகளை தவிர்த்து, மீதமுள்ள, 51 கடைகளை மட்டுமே ஒதுக்க வேண்டும்; முந்தைய மாதம் வரையுள்ள நிலுவை தொகையை வசூலித்த பிறகே கடைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. 9 கடைக்காரர்கள் மட்டுமே எவ்வித நிலுவையின்றி வாடகை செலுத்தியுள்ளனர்.
மீதமுள்ள, 42 கடையை சேர்ந்தவர்கள், 91 லட்சத்து, 27 ஆயிரத்து, 452 ரூபாய் வாடகை நிலுவை வைத்திருக்கின்றனர். சலுகை கேட்டு அரசுக்கு அனுப்பிய கருத்துருவுக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அதை மீறி, அனைத்து கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி அளிக்குமா என்கிற சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
'குலுக்கல் முறை'
மேலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள, 51 கடைகளில் ஒரு கடையை தமிழக அரசின் மீன் வளர்ச்சி கழகத்துக்கும், நான்கு கடைகளை கோழி இறைச்சி வியாபாரத்துக்கும் ஒதுக்க, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது; மீன் வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்க மறுக்கின்றனர்.
அதனால், வியாபாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில், 51 கடைகளையும் ஒதுக்க வேண்டுமென்கிற கோரிக்கை மாநகராட்சியிடம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்னை நீடிப்பதால், புதிய மீன் மார்க்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

