ADDED : ஏப் 17, 2026 08:17 PM
பொள்ளாச்சி: தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் உற்பத்தியைப் பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.,15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை தமிழக எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை செய்யப்படும். தற்போது, தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. அதனால் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால், மீன் மார்க்கெட்களுக்கு கடல் மீன் வரத்து இருக்காது. பிறமாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. பொள்ளாச்சி மீன் மார்க்கெட்டுக்கு, கடந்த ஒரு வாரமாக கடல் மீன் வரத்து குறைந்துள்ளது. ஏரி, குளம் மற்றும் அணைகளில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்கு மீன் விலை அதிகமாக இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
