/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பதில் சுணக்கம்
/
பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பதில் சுணக்கம்
ADDED : நவ 01, 2025 05:24 AM
கோவை: கோவையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், செயல்படும் வட்டாரம் மற்றும் குறுவள மையங்களில், போதிய ஆசிரியர் பயிற்றுநர்கள் இல்லாததால், கல்வித் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பேரூர், சூலூர், எஸ்.எஸ்.குளம், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 15 வட்டார வள மையங்களும், 106 குறுவள மையங்களும் இயங்கி வருகின்றன.
இந்த மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவது, கற்றல்-கற்பித்தல் முறையில் அறிமுகப்படுத்தப்படும் புதுமைகளை வழிகாட்டுவது மற்றும் அரசின் கல்வி திட்டங்கள் பள்ளிகளில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை கண்காணிப்பது போன்ற முக்கிய பணிகளை செய்து வருகின்றனர்.
கண்காணிப்பில் சவால் 'புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம்', 'எண்ணும் எழுத்தும்', மன்ற செயல்பாடுகள், வாசிப்பு பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் என பல்வேறு பணிகளை இவர்களே மேற்கொண்டு வருகின்றனர்.
106 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களில், தற்போது 79 பணியாளர்கள் உள்ளனர். மீதமுள்ள இடங்கள் காலியாக இருப்பதால், பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுநரும் குறைந்தது, 24 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, திட்ட செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். ஆனால், ஆள் பற்றாக்குறையால், சில பள்ளிகளில் திட்ட செயல்பாடுகளை முழுமையாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

