/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் மலர்க்கண்காட்சி அசத்துகிறது பூக்கள் அலங்காரம்
/
வேளாண் பல்கலையில் மலர்க்கண்காட்சி அசத்துகிறது பூக்கள் அலங்காரம்
வேளாண் பல்கலையில் மலர்க்கண்காட்சி அசத்துகிறது பூக்கள் அலங்காரம்
வேளாண் பல்கலையில் மலர்க்கண்காட்சி அசத்துகிறது பூக்கள் அலங்காரம்
ADDED : பிப் 09, 2025 12:44 AM

கோவை: கோவை, வேளாண் பல்கலை சார்பில், தாவரவியல் பூங்காவில், 7வது மலர்க் கண்காட்சி நேற்று துவங்கியது. வண்ண வண்ணப் பூக்களால் உருவாக்கப்பட்ட உருவங்கள் கண்ணைக் கவருவதாக இருந்தன.
வேளாண் பல்கலை வளாகத்தில் நடக்கும் மலர்க் கண்காட்சியை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
மலர்க் கண்காட்சி 25 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் முதல் இறுதி வரை வண்ண வண்ணப்பூக்களால் தோரணங்கள், அலங்கார வளைவுகள், யானை, முயல், கலைமகள், அன்னப்பறவைகள் என கண் கவரும் விதத்தில் பூக்களால் ஆன உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மிக அரிதாகக் காண முடிகிற வாசனை வீசும் உலர் மலர்களின் அலங்காரமும் இடம்பெற்றுள்ளது. பழ அறிவியல் மையம் சார்பில் தமிழகத்தில் கிடைக்கும் 60க்கும் மேற்பட்ட பழ வகைகள். ஒவ்வொரு பழங்களில் வெவ்வேறு ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கனகாம்பரம் முதல் ஆர்கிட் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பூக்கள் மலர்க்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டத்துக்கான கிட்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் விளையாடுவதற்கான விதவிதமான விளையாட்டு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான நேற்று, ஏராளமான பள்ளிகளில் இருந்து குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். பூ அலங்காரங்களின் முன் நின்று, குழந்தைகளும், பொதுமக்களும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இசை, நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வேளாண் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன.
வரும் 12ம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடக்கிறது. காலை 9:00 மணி முதல் இரவு 6:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
துவக்க விழாவில், மேயர் ரங்கநாயகி, வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணா மூர்த்தி, வேளாண் இயக்குநர் முருகேஷ், கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

