/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றில் பறக்குது! ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத மாநகராட்சி; முழுமையாக அகற்றாத கட்சிக் கொடிக்கம்பங்கள்
/
காற்றில் பறக்குது! ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத மாநகராட்சி; முழுமையாக அகற்றாத கட்சிக் கொடிக்கம்பங்கள்
காற்றில் பறக்குது! ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத மாநகராட்சி; முழுமையாக அகற்றாத கட்சிக் கொடிக்கம்பங்கள்
காற்றில் பறக்குது! ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத மாநகராட்சி; முழுமையாக அகற்றாத கட்சிக் கொடிக்கம்பங்கள்
ADDED : ஜூலை 03, 2025 10:07 PM

கோவை: ஐகோர்ட் உத்தரவிட்டும் கூட, கோவையில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இன்னும் முழுமையாக அகற்றவில்லை.
கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்கள், ரோடுகள் மற்றும் சந்திப்புகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைகளுக்கு சொந்தமான ரோடுகளில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி அமைப்புகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருக்கின்றன.
இவற்றை, ஏப்., 21க்குள் அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அவகாசம் முடிந்தது
அதன்படி, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளும் தாமாக அகற்றிக் கொள்ள அறிவுரை வழங்கி, கடிதம் எழுதியது. அதற்கு மரியாதை கொடுத்து, ஒரு கட்சி கூட, தாமாக முன்வந்து கொடிக்கம்பங்களை அகற்றவில்லை.
ஐகோர்ட் கொடுத்த அவகாசம் ஏப்., 21ல் முடிந்தது. அதை சுட்டிக்காட்டி, நமது நாளிதழில் ஏப்., 22ல் செய்தி வெளியிடப்பட்டது.
இதன்பின், துாக்கத்தை கலைத்த மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், ஒவ்வொரு ஏரியாவாக சென்று, கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றினர். மொத்தம், 2,200 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக, 'கணக்கு' காட்டியுள்ளனர். இன்னும் எடுக்கப்படாமல் பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் காணப்படுகின்றன.
அவற்றை முழுமையாக எடுக்காமல் அதிகாரிகள் விட்டு விட்டனர்.
90 சதவீதம் அகற்றம்
இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட், 'அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டிய சூழல் ஏற்படும்' என, எச்சரித்திருக்கிறது. இதையடுத்து, எந்தெந்த இடங்களில் எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன என, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிடமும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து விளக்கம் கோரப்பட்டிருக்கிறது.
கோவையில், 90 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றியிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள, 10 சதவீத கொடிக்கம்பங்களை விரைந்து அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் இனியாவது சோம்பல் முறித்து கொடிக்கம்பங்களை விரைந்து அகற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.